பதிவு செய்த நாள்
30
அக்
2024
07:10
சென்னை; ‘‘சனாதன தர்மத்திலும் கடவுள் ஒருவர்தான்,’’ என, சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், ‘விஜய யாத்திரை – 2024’ நிகழ்வுக்காக, சென்னைக்கு விஜயம் செய்துள்ளார். யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சுவாமிகள் சன்னியாச தீட்சை ஏற்றதன், 50ம் ஆண்டு நிறைவு விழா, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரியில் நடந்தது. விழாவில், சிருங்கேரி சன்னிதானம் ஆற்றிய அருளுரை: ஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களிலும், சன்னியாசிகள் தான் பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என, அவர் கட்டளையிட்டார். பீடாதிபதிகளுக்கு பாசமும், துவேசமும் இருக்கக் கூடாது. அப்போதுதான், அவர்களால் தர்ம பிரசார கடமையை சரியாக செய்ய முடியும்.
50 ஆண்டு விழா: பீடாதிபதிகளுக்கு பாசம் இருந்தால், தகுதி இல்லாதவருக்கும் தத்துவ உபதேசம் செய்ய வாய்ப்புள்ளது. துவேசம் இருந்தால், தகுதியுள்ள சிஷ்யருக்கும் தத்துவ உபதேசம் கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது. அதனால்தான் பாசமும், துவேசமும் இல்லாத நிலையை அடைந்த சன்னியாசிகள்தான் பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என, ஸ்ரீஆதிசங்கரர் கட்டளையிட்டார். அந்த அளவுக்கு உயர்ந்த நிலை சன்னியாசம். அதனால்தான் மற்றவர்களைவிட சன்னியாசிகளுக்கு அதிக மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. சன்னியாசியாக இருப்பதே கடினம். அதைவிட கடினம் பீடாதிபதியாக இருப்பது. சன்னியாசியாக மட்டும் இருந்தால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு தியான நிலையிலேயே இருந்து விடலாம். ஆனால், பீடாதிபதியாக இருப்பவர்கள் பற்றற்றும் இருக்க வேண்டும்; அதே நேரம், எல்லாரையும் அரவணைத்தும் செல்ல வேண்டும். இந்த கடினமான பணியை, 50 ஆண்டுகள் மிகச் சிறப்பாக செய்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சுவாமிகள். அவரது சிஷ்யனான எனக்கு வேதாந்தம், உபநிடதம் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தந்தார். அவர் 12 ஆண்டுகளுக்குமுன், சென்னை யாத்திரை வந்தபோது நானும் வந்திருந்தேன். யாத்திரையின் போதே எனக்கு பாடங்களை விடாமல் கற்றுத்தந்தார். இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காது. அனைத்திலும் பாண்டியத்தியம் பெற்ற மகா சன்னிதானத்தை குருநாதராகப் பெற்றது எனக்கு கிடைத்த பாக்கியம். குருவானவர் நல்ல வழியை காட்டுவார். சிஷ்யராக இருப்பவர் குரு சொன்னதை புரிந்து கொண்டு, தனக்கு சரியானதை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். தங்களை குரு என்று சொல்லிக் கொள்ளும் பலர் என்னென்னமோ சொல்கின்றனர். யார் சொல்வதை நம்புவது என, பலர் என்னிடம் கேட்கின்றனர். குழந்தையை படிக்க வைக்க, நல்ல பள்ளியை தேர்ந்தெடுக்க மெனக்கெடுவது போல, நல்ல குருவை தேர்ந்தெடுக்கவும் மெனக்கெட வேண்டும்.
பல்வேறு அவதாரம்: என் குருவான மகா சன்னிதானம், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் பொறுப்புகள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். இனி அனைத்தையும் நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறிய அவர், 45 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒருவர் மடத்தில் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து, எல்லாவற்றையும் செய்யுங்கள் என்றார். அதுதான் என் தைரியம். கடவுளை வணங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது ஆகிய இரண்டையும்தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. குருவின் வழிகாட்டுதல் கிடைக்காத இடங்களில் இருப்பவர்கள், கடவுளையே குருவாக ஏற்றுக் கொண்டு பகவான் கிருஷ்ணர், ஸ்ரீஆதிசங்கரரின் ஸ்லோகங்களை படித்தாலே புண்ணியம் கிடைக்கும். கண்டிப்பாக கடவுள் வழிகாட்டுவார். ஹிந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் இருப்பதாக மற்றவர்கள் விமர்சிப்பதுண்டு. அது தவறான புரிதல். ஹிந்து மதத்திலும் கடவுள் ஒருவர்தான். அனைவருக்கும் அனுகிரஹம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடவுள் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். ஒரு அவதாரம்தான் பெரிது. இன்னொரு அவதாரம் சிறிது என பலரும் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஸ்ரீஆதிசங்கரர் அவதரித்து, கடவுள் ஒருவரே; சிவனே விஷ்ணு, விஷ்ணுவே சிவன் என, மத ஒற்றுமையை வலியுறுத்தினார். மகா சன்னிதானத்தின் சன்னியாச பொன் விழாவில், மத ஒற்றுமையை ஏற்படுத்த சிவ என்றும், ராம என்றும் கடவுளின் நாமங்களை தலா 108 முறை, ஒரு கோடி பேரை எழுத வைக்கும் இயக்கத்தை, கடந்த விஜயதசமி அன்று துவக்கியுள்ளோம். வரும் ராம நவமி வரை நடக்கும் இந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஒரு படிவத்தில் தலா 108 முறை சிவ, ராம நாமத்தை எழுத 10 நிமிடங்கள் போதும். அந்த 10 நிமிடங்களை தாருங்கள் என, அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கோடி பேர் எழுதும் சிவ, ராம நாம படிவங்கள், சிருங்கேரியில் கட்டப்படும் கோவிலில் வைக்கப்படும். இவ்வாறு சன்னிதானம் அருளுரை வழங்கினார்.
நல்லது நடக்கும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி பேசியதாவது: கடந்த 2017ல் மகா சன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் கோவை வந்திருந்தார். ஒரு தலைப்பை கொடுத்து பேச சொன்னார். மனதை திடப்படுத்திக்கொண்டு, இதுவரை என்னை வழிநடத்திய ஆச்சாரியார், இப்போதும் என்னை வழிநடத்துவராக எனக்கூறி பேசத் துவங்கினேன். என்ன பேசினேன் என்பது எனக்கு தெரியவில்லை. நன்றாக பேசுவதாக பலர் பாராட்டினர். பேசிக் கொண்டிருக்கும்போதே, மகா சன்னிதானம் ஆசிர்வதித்ததாக சொன்னார்கள். பேசியதும் அவரே; பாராட்டியதும் அவரே என்பதை உணர்ந்தேன். கடந்த 1992 ஜனவரியில், என் சொந்த வாழ்வில் பிரச்னை இருந்த நேரம். அதனால், மகா சன்னிதானம் வந்தபோது பார்க்க விரும்பவில்லை. என் கோபத்தை காட்ட அரைக்கால் சட்டை அணிந்து சென்றேன். பூஜைக்கு அம்மா அழைத்தும் சினிமாவுக்கு சென்றேன். ஆனால், சினிமா பிடிக்காமல் பாதியில் திரும்பி, பூஜையில் இருந்த அம்மாவிடம், வீட்டு சாவியை வாங்க சென்றேன். அப்போது, சன்னிதானத்தை தரிசிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. சிருங்கேரிக்கு அழைத்தார். இதுவெல்லாம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள். குருவிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று இருந்தால் நல்லது நடக்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி மூத்த அறிஞர் மணி டேவிட் சாஸ்திரிகள், புராண அறிஞர் சுந்தரகுமார் உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றனர்.