பதிவு செய்த நாள்
01
நவ
2024
07:11
பழநி; ‘‘பழநி முருகன் கோயில் காலசந்தி பூஜைக்காக 19ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட செப்பேடு அமெரிக்க அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது,’’ என தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பழநி முருகன் கோயிலில் காலசந்தி பூஜை, திருமஞ்சனக்கட்டளைக்காக எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் உள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில் ஆசியப்பிரிவில் 19ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சமூக செப்பேடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதன் நகலை ஆராய்ந்ததில் தமிழில் எழுதப்பட்ட இச்செப்பேட்டை 24 கொங்கு நாடுகளைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள் பழநி முருகனுக்கு நித்தியப்படிக்கு திருமஞ்சனம், சரமாலை, வில்வ அர்ச்சனைக்காக திருக்கணக்குப் பண்டாரத்தை ஏற்பாடு செய்த தகவல் உள்ளது. இச்செப்பேடு 34.3, செ.மீ, உயரம், 23.8 செ.மீ., அகலத்தில் உள்ளது. இரு பக்கமும் 119 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முகப்பில் பொன்காளி அம்மனும், வேல், சந்திர, சூரியர்களுக்கு நடுவே அப்புச்சி, இடதுபுறம் முருகன் அமர்ந்த நிலையில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வையம் நீடுக எனும் பாடலுடன் தொடங்கும் இதில் இரு பாடல்களில் முருகனின் புகழ் கூறப்படுகிறது. இதில் சாலிவாகன ஆண்டும் கலியுக ஆண்டும் தவறாக உள்ளது. கர ஆண்டு பங்குனி 16 திங்கட்கிழமை பூச நட்சத்திரம் என எழுதப்பட்டுள்ளது. கட்டையக் கவுண்டர் கோயில் குறிப்பின் அடிப்படையில் இச்செப்பேடு 19 ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. இது சின்னோப நாயக்கர், தவராச பண்டிதர், பழனியப்ப நம்பியார், பாணிபாத்திர உடையார், தலத்துக்கணக்கு காத்தசாமி, பாலைய சாமியார், பச்சகந்தையர், சம்மந்தமூர்த்தி முன்னிலையில் எழுதப்பட்டுள்ளது. இதன் பிறகு அக்குறிப்பிட்ட சமூகத்தின் புகழ் கூறப்படுகிறது. அச் சமூகத்தினர் பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு செய்தவை குறித்து செப்பேடு கூறுகிறது. இச்செப்பேடு பழநியில் இருந்து ஆங்கிலேய பெண் கால்கன் என்பவரிடமிருந்து அமெரிக்கா சென்றது. அந்தப் பெண்ணிடம் செப்பேடு சென்றது குறித்த விபரங்கள் தெரியவில்லை என்றார்.