பதிவு செய்த நாள்
01
நவ
2024
08:11
ஹாசன்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, தரிசனம் தரும் ஹாசனாம்பா கோவிலில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், 1,000 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஹாசனின், ஹாசனாம்பா கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, கோவில் கதவு திறக்கப்படும். 10 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். வெளி மாவட்டம், மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவர். ஹாசனாம்பா கோவில் நடை அக்டோபர் 24ம் தேதி திறக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., 500 சிறப்பு பஸ்களை இயக்கியது. தினமும் பக்தர்கள் வருகின்றனர். தர்ம தரிசனத்துடன், 300 ரூபாய் டிக்கெட், 1,000 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டது. 1,000 ரூபாய் டிக்கெட் வாங்கினால், வரிசையில் நிற்காமல் நேரடியாக தரிசிக்கலாம். வி.ஐ.பி., பாஸ்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 3ம் தேதி வரை, ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி உள்ளது. எனவே பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திண்டாடுகின்றனர். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், 1,000 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டையும், வி.ஐ.பி., பாஸ்களையும் கோவில் நிர்வாகம் நேற்று ரத்து செய்தது. பக்தர்களின் வசதிக்காக துவக்கப்பட்ட, 500 சிறப்பு பஸ்களின் போக்குவரத்தையும், கே.எஸ்.ஆர்.டி.சி., நேற்று ரத்து செய்தது. சிறப்பு பஸ்கள் இயங்கியதால், பெங்களூரு உட்பட, மாநிலம் முழுதும் ‘சக்தி’ திட்டத்தில் பெண் பக்தர்கள் இலவசமாக ஹாசனாம்பா கோவிலுக்கு வர, உதவியாக இருந்தது. தற்போது பஸ்களை நிறுத்தியதால், பக்தர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.