பதிவு செய்த நாள்
04
நவ
2024
11:11
புதுக்கோட்டை; புதுகோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜீவிதா தலைமையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொன்னாம்பட்டி கிராம காட்டுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை தொல்லியல், வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவர் பாண்டியன் கூறியதாவது: பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரினங்களும், தாவரங்களும் புதையுண்டு பல கோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் சிக்கியுள்ளது. சுண்ணாம்பு பாறைகளின் இடையில் சிக்கியதன் காரணமாகவும், கார தன்மை காரணமாக மட்காமல் அதே நிலையில் இருந்துள்ளது. இதன் காரணமாக கரிம பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரம், கடல்வாழ் உயிரிகள், கனிம பொருளால் ஆன படிமங்களாக மாறிவிட்டன. இந்த நிகழ்வு ஏற்பட நீண்ட நெடிய காலங்களை எடுத்துக் கொள்கிறது. புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் ஏற்கனவே இரண்டு கல்மர துண்டுகள் கிடைத்துள்ளது. இவை மிக நீண்டதாக இருந்து தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகிறது. இந்த இடத்தை இந்திய புவியியல் ஆய்வுத்துறை ஆய்வு செய்ய வேண்டும். வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப்படுத்தாமல், அதே இடத்தில் அருங்காட்சியகமாக அல்லது புவியியல் பார்வையிடமாக மாற்ற தமிழக அரசும், தொல்லியல் துறையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.