பதிவு செய்த நாள்
04
நவ
2024
12:11
சென்னை; எந்த சமூகத்தை இழிவாகப் பேசினாலும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய வேண்டும்,’’ என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தினார். பிராமண சமூகத்தின் மீதான, தொடர் அவதுாறு பிரசாரத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், நேற்று சென்னையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத் பேசியதாவது: தமிழகத்தில் அந்தணர்களை, அந்நியர்கள், ஆரியர்கள் என, இழிவாகப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் அவர்களை இழிவுப்படுத்துவது அதிகரித்து வருவதோடு, தமிழ் சமூகத்திலிருந்து அவர்களை பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது. சமீபத்தில் ‘சண்டாளன்’ என்ற பாடலை சீமான் பாடியதால், அந்த வார்த்தையை வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர். அதேபோல், பொதுமேடைகளிலும், பொது இடங்களிலும், அந்தணர்களை இழிவாக பேசுவோருக்கும், இந்த சட்டம் பொருந்த வேண்டும். பிற சமுதாயத்தை இழிவாகப் பேசினால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதுபோல், அந்தணர்களை மோசமாக விமர்சித்து பேசுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் முதல், அனைத்து அந்தணப் பெண்களையும் இழிவாகப் பேசுகின்றனர். முதல்வரின் வீட்டிலேயே சனாதனம் உள்ளது. ஆனால், அந்தணர்களை இழிவாகப் பேசும், தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை, முதல்வர் கண்டிக்காதது வேதனையாக உள்ளது. எந்த சமூகத்தை யார் இழிவாகப் பேசினாலும், அவர்கள் மீது பி.சி.ஆர்., சட்டம் பாய வேண்டும். அந்தணர்களை இழிவுப்படுத்தும் வரலாறுகளை, தமிழக பாட நுால்களில் இருந்து நீக்க வேண்டும். தமிழக அரசு மற்ற சமூகத்தினரை பாதுகாப்பதுபோல், அந்தணர்களையும் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவோம்.
சமூக செயற்பாட்டாளர் அமெரிக்கை நாராயணன்: இந்தியன் என்று சொல்வதில் இறுமாப்பு கொள்ள வேண்டும். தமிழுக்கு நாம் ஆதரவு என்றால், மற்ற மொழிகளுக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. தமிழகத்தில் 0.1 சதவிதம் உள்ள கடவுள் எதிர்ப்பாளர்கள், மீதமுள்ள 99.9 சதவீதம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை எதிர்க்கின்றனர். அதற்காக ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம்ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., பொதுச் செயலர் கரு நாகராஜன்: தமிழகத்தில் பிராமன எதிர்ப்பை, எப்போது தி.மு.க., அரசு கைவிடுகிறதோ, அன்று தான் இந்த மாநிலம் சிறந்து விளங்கும்,’’ என்றார்.
பா.ம.க., ஊடக பிரிவு பொறுப்பாளர் ஸ்ரீராம்: ‘‘பிராமண சமூகம், கல்வியால் வளர்ச்சி அடைந்த சமூகம். இவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அனைவரும் ஒன்று கூடி போராட வேண்டும்.
தமிழக பிராமணர் சங்க மாநிலத் தலைவர் நாராயணன்: சமீப காலமாக பிராமணர்களுக்கு எதிராக அதிகரித்து வரும், இழிவுவான செயல்களை பொறுத்து கொண்டு வந்தோம். இன்று அவை எல்லைகளை தாண்டிய நிலையில், நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பிராமணர்கள் தேவைப்பட்டால், தெருவிற்கு வர தயாராக உள்ளோம். இவ்வாறு பேசினர்.