பதிவு செய்த நாள்
04
நவ
2024
01:11
திருப்பூர்; திருப்பூர் பகுதி சிவன், முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்றுவருகிறது. கந்தப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்படுகிறது. திரளான பக்தர்கள், சஷ்டி விரதம் கடைபிடித்து, முருகப்பெருமானை வழிபட்டுவருகின்றனர்.
பல்லடம், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், கந்த சஷ்டி, சூர சம்ஹார விழா, விநாயகர் வேள்வியுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. வரும் 7ம் தேதி, மூலவர் முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம், பிற்பகல், 3:30 மணிக்கு வேள்வியை தொடர்ந்து, அலங்கார பூஜை நடைபெறுகிறது. மாலை, 5:15 மணிக்கு மரகதாம்பிகை அம்மையிடம் வேல் பெறும் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
வாலிபாளையம் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் காலை, அபிஷேகம்; மதியம், 12:00 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. 7ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, சூரசம்ஹார காட்சி நடைபெறுகிறது.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் வெவ்வேறு வண்ண மலர் அலங்காரத்தில், முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இரண்டாவது நாளான நேற்று, முருகப்பெருமானுக்கு ரோஸ் நிற பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று வெள்ளை நிற பூக்கள்; நாளை சிவப்பு நிறம்; நாளை மறுநாள், பச்சை நிறப் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. வரும் 7ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. சூர சம்ஹாரம் முடிவடைந்தபின், வரும் 8ம் தேதி, அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடைபெறும்.