பதிவு செய்த நாள்
05
நவ
2024
11:11
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் முல்கியில் சாம்பவி ஆற்றின் அருகில் அமைந்துள்ளது பாப்பநாடு துர்க்கா பரமேஸ்வரி கோவில். புராணங்கள்படி, தரிகாசுரன் என்ற அசுர மன்னன், பிரம்மனை வேண்டி கடும் தவம் புரிந்தார். இதனால் மகிழ்ந்த பிரம்மன், தரிகாசுரனுக்கு வேண்டிய வரத்தை கொடுத்தார். இந்த வரத்தால், விஷ்ணு மீது போர் தொடுத்தார். விஷ்ணுவிடம் இருந்து பறித்த ஆயுதத்தை, தன் மனைவியிடம் தரிகாசுரன் ஒப்படைத்தார். இதை பார்த்து கோபமடைந்த துர்க்கா, ‘சப்த – துர்க்கா’ அவதாரம் எடுத்து, தரிகாசுரனை அழிப்பேன் என்று சபதம் செய்தார்.
மூதாட்டி; சோனிதாபுரா சென்ற துர்க்கை, மூதாட்டியாக உருமாறி, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தரிகாசுரனை வணங்கி, பிச்சை கேட்டார். அதற்கு அசுரன், அரண்மனைக்கு சென்று தன் மனைவியிடம் உணவு கேட்க சென்னார். அவர் கொடுக்க மறுத்தால், என்னிடம் திரும்பி வா என்றும் கூறி அனுப்பினார். துர்க்கையும், அரண்மனைக்கு சென்று தரிகாசுரன் மனைவியிடம், விஷ்ணுவின் ஆயுதத்தைத் தரும்படி கேட்டார். அசுரனின் மனைவி கொடுக்க மறுத்தார். மீண்டும் அசுரனிடம் வந்து, ‘உங்கள் மனைவி பிச்சை கொடுக்க மறுக்கிறார்’ என்று புகார் கூறினார். அதற்கு அசுரன், வயதான பெண் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டதாக கூறும்படி மூதாட்டியிடம் கூறினான். மூதாட்டியும் மீண்டும் அரண்மனைக்கு வந்து, அசுரன் கூறியதை கூறினார். இதையடுத்து, விஷ்ணுவின் ஆயுதத்தை மூதாட்டியிடம் கொடுத்தார்.
பத்ரகாளி; வீட்டுக்கு வந்த தரிகாசுரன், தன் மனைவி கூறியதை கேட்டு கோபமடைந்தார். சப்த துர்க்கைகளுக்கு எதிராக போரிட்டார். போரில் தோல்வியடைந்த தரிகாசுரன், தன்னை பாதுகாத்துக் கொள்ள தப்பித்து ஓடினார். ஆனாலும், மஹா விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்தபோது, பத்ரகாளி அவதாரம் எடுத்த துர்க்கை, தரிகாசுரனை வதம் செய்தார். பின், பத்ரகாளி உட்பட சப்த துர்க்கைகளும், மண்ணுலகில் உள்ள பக்தர்களுக்கு அருள்புரிய தங்களுக்கு விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலகம் செல்ல, சந்தன படகு வழங்குமாறு விஷ்ணுவிடம் கேட்டார். அவரும், துர்க்கையின் விருப்பத்துக்கு இணங்கி, பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். மற்றொரு புராணப்படி, முன்னொரு காலத்தில் கேரளாவை சேர்ந்த முஸ்லிம் வணிகர் ஒருவர், சாம்பவி ஆற்றில் படகில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு இடத்தில் படகு நின்றது. அங்கு ஆற்றில் சிவப்பு நிறத்தில் நீர் ஓடுவதை பார்த்த அவர் திடுக்கிட்டார். அப்போது அவருக்கு ‘அசரிரீ’ கேட்டது. அதில், ஜெயின அரசர் முல்கி ஸ்வந்தாவிவின் உதவியை நாடுமாறும், அவளுக்கு ஒரு கோவில் கட்டும்படியும்’ அசரிரீ கேட்டது. இதன் பேரில், அரசிடம் சென்று, நடந்த சம்பவத்தை கூறினார். அரசரும், அந்த வணிகர் கூறியபடி கோவில் கட்டியதாக கூறப்படுகிறது. இன்றும் இக்கோவிலில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர். இக்கோவில் தினமும் காலை 5:30 முதல் மதியம் 2:00 மணி வரையிலும்; மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழாவில், கோவில் கட்டிய முஸ்லிம் குடும்பத்தினரும் இன்னும் மலர்கள் வழங்கி வருகின்றனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், ‘சமுதாய உணவு’ அளிக்கப்படுகிறது. அனைத்து மதத்தினரும் பங்கேற்று சாப்பிடுகின்றனர். இத்துடன், இப்பகுதியில் பூக்கள் விற்பனை செய்யும் கிறிஸ்தவர்கள், திருவிழா காலங்களில் இக்கோவிலுக்கு என்றால் மட்டுமே பூக்கள் வழங்குகின்றனர்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.ரயிலில் செல்வோர் முல்கி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, பஸ்சில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர் முல்கி பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்தே செல்லலாம். – நமது நிருபர் –