பதிவு செய்த நாள்
06
நவ
2024
10:11
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி நடந்து வருகிறது. 4 ம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது.
4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 7:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. அங்கு சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளியதும் குஜராத் மயில் இறகுகள் மூலம் பெங்களூருவில் தயார் செய்யப்பட்ட மாலை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது சென்னை பக்தர் சக்திவேல் உபயமாக வழங்கிய மயிலிறகு மாலை 2 வது முறையாக சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு நெல்லிக்கனி, ஏலக்காய், தாமரை என பல்வேறு வகையான மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்னர், 4 ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதருக்கு வைரவேல் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கதேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை ( 7 ம் தேதி) மாலை 4.: 30 மணியளவில் கோவில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கிறது. 8 ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.