பதிவு செய்த நாள்
06
நவ
2024
12:11
பொள்ளாச்சி; சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா கடந்த,1ம் தேதி துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். இன்று மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது. நாளை (7ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரமும்; 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஹா அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது. 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
* குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், இன்று மாலை, 5:00 மணிக்கு மாரியம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு ஊர் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனையும், 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
* அங்கலகுறிச்சி செல்வமுருகன் கோவிலில் இன்று காலை, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில் அம்பிகையிடம் இருந்து வேல்வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், முருகனிடம் வேல் சேர்க்கும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நாளை மாலை, 6:00 மணிக்கு செல்வமுருகர் சூரசம்ஹாரத்துக்கு புறப்படுதல், மாலை,6:30 மணிக்கு சூரசம்ஹாரமும், இரவு, 8:30 மணிக்கு பால் அபிேஷகம், தீபாராதனையும் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருக பெருமானுக்கு மஹா அபிஷேகம், திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது.
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு கந்தசஷ்டி விழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலையில் உற்சவருக்கு சிறப்பு புஷ்பாபிஷேகம், சிறப்பு அலங்கார வழிபாடும், மாலையில் மூலவர் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை (7ம் தேதி) மதியம், 12:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலிருந்து, சூரனை வதம் செய்ய அன்னையிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்ட், ஸ்டேன்மோர் சந்திப்பு, காந்திசிலை, சுப்ரமணிய சுவாமி கோவில் முன்பகுதியில், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி, துவங்கியது. இன்று (6ம் தேதி), காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை, 5:00 மணிக்கு, கரிய காளியம்மன் கோவிலில் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, 7ம் தேதி, காலை உற்சவர் மூலவருக்கு, விஷேச அபிஷேக அலங்கார ஆராதனை மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, கிரி வல வீதியில் சூரசம்ஹாரம் நடக்கிறது. வரும், 8ம் தேதி, காலை சுவாமிக்கு திருக்கல்யாணம், மாலையில் திருவீதி உலா நடக்கிறது. 9ம் தேதி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.
உடுமலை; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி, சஷ்டி விரதம் துவக்கிய நிலையில், தினமும், சுவாமிக்கு, காலை, மாலை நேரங்களில், யாக சாலை பூஜைகள், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று, யாக சாலை பூஜைகள், சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. வரும், 7ம் தேதி, மதியம், 3:15 மணிக்கு, சுவாமி புறப்பாடும், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. – நிருபர் குழு –