பதிவு செய்த நாள்
06
நவ
2024
01:11
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (7ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவின் 4ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட பூஜையும் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாகசாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணவத்தை அழித்து சூரனை ஆட்கொள்ளும் சூரசம்ஹார விழா நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது, மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.