பதிவு செய்த நாள்
08
நவ
2024
04:11
மேட்டுப்பாளையம்; பவானி ஆற்றின் கரையோரம் உள்ள, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் நடந்தது.
மேட்டுப்பாளையம் நகரில் பவானி ஆற்றின் கரையோரம் மிகவும் பழமை வாய்ந்த, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, இரண்டாம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. நேற்று மாலையில் சூரசம்ஹார விழா நடந்தது. இன்று காலை திருக்கல்யாண வைபவம் நடந்தது. அலங்காரம் செய்த பந்தலில், சுப்ரமணிய சுவாமி, வள்ளியூர், தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை தட்டுகளை கொண்டு வந்திருந்தனர். வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. தீபாராதனை முடிந்த பின், பக்தர்களுக்கு தாலி சரடு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, முருக பக்தர் பேரவை தனசேகர், ஆறுமுகம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தனசேகரன், கண்ணன், விஷ்ணு வேல், விஜயகுமார் ஆகிய குருக்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.