பதிவு செய்த நாள்
08
நவ
2024
04:11
பல்லடம்; அரோகரா கோஷம் முழங்க, மாதப்பூர் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.
பல்லடத்தை அடுத்த, மாதப்பூரில் முத்துக்குமாரசாமி மலை உள்ளது. இங்கு மூலவராக முத்துக்குமாரசாமியும், மகிமாலீஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை ஆகியோர் பரிவார தெய்வங்களாகவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில், நவ., 2 அன்று கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு கேள்வி வழிபாடுகளுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். நேற்று கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. மரகதாம்பிகையிடம் வெற்றிவேலை பெற்றுக் கொண்டு, மயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, சூரனை வதம் செய்தார். இதையடுத்து, இன்று காலை, 5.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்வு துவங்கியது. அரோகரா கோஷம் முழங்க முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. காப்பு கட்டி ஏழு நாள் விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர். வள்ளி தெய்வானை சமேதராக கல்யாண கோலத்தில் முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.