பதிவு செய்த நாள்
08
நவ
2024
05:11
கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரஜோதி சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஐயப்பனை தரி சிக்கின்றனர். மாதாந்திர நடைதிறப்பின் போதும் ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். சன்னிதானத்திற்கு தேவையான பூஜை, இதர பொருட்கள் டிராக்டரில் கொண்டு செல்லப்படும். டிராக்டர்கள் செல்லும்போது, பக்தர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. இதை தவிர்க்க, பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 2.90 கி.மீ. துாரத்திற்கு ரோப் கார் அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
ரோப் கார் திட்டத்துக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட திட்ட வரைபடங்கள், காட்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததால், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. இப்போது பக்தர்கள் செல்லும் நடைபாதை அருகிலேயே துாண்கள் அமைத்து, ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்தாண்டில் மண்டல, மகரவிளக்கு விழா காலத்துக்குள் ரோப் கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்ட நாளில் இருந்து, 24 மாதங்களுக்குள் பணி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரளா வனத்துறை அமைச்சர் சசீந்திரன், தேவசம் அமைச்சர் வாசவன், திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் முன்னிலையில் நடந்த உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
தனி வானொலி நிலையம்; உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்காக திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில் இணையதள வானொலி தொடங்குகிறது. தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கும் வானொலி நிலையத்துக்கு ஹரிவராசனம் என்று பெயரிடப்பட்டுள் ளது. 24 மணிநேரமும் இயங்கும் இந்த வானொலியில், சபரிமலை சம்பந்தமான அறிவிப்புகள், பக்தி சொற்பொழிவுகள் என்று ஆன்மிக விஷயங்கள் ஒலிபரப்பப்படும். இந்த வானொலியை நடத்திட ஆர்வமுள்ள அனுபவமுள்ள தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.