திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்; கந்த சஷ்டி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 05:11
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் இன்று சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்து கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.2 ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மூலவருக்கு மாலையில் அபிஷேக, ஆராதனைகள், உற்ஸவர் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஆறாம் திருநாளை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது. இன்று நிறைவு நாளான ஏழாம் திருநாளை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக காலை 9:00 மணிக்கு திருமுருகன் திருப்பேரவை அலுவலகத்திலிருந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். மூலவர் சன்னதியில் யாக குண்டம் முன்பாக உற்ஸவ முருகன் தெய்வானை எழுந்தருளினர். மணமக்கள் அலங்காரத்திற்கு பின்னர் ரமேஷ் குருக்கள்,பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சர்யர்களால் யாக பூஜைகள் நடந்தது. பின்னர் மாலை மாற்றுதலுடன் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் காலை 10:20 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.பெண்களுக்கு மஞ்சள்,மஞ்சள்நாண்,குங்குமம்,ரோஜா பூக்கள் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை தேவஸ்தானம், திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர். திருப்புத்தூர் காளியம்மன் கோயில் அருகில் முருகன் கோயிலிலும் கந்தசஷ்டி விழா நிறைவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.