திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணி நதி என்றும் வற்றுவதில்லை. இதற்கு இந்த ஊரில் அருள்புரியும் நெல்லையப்பரே காரணம். பொதுவாக கோயில்களில் சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்படும் தீர்த்தம் வடக்கு பகுதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு முன் சற்று தள்ளி விழும்படியாக ‘கோமுகை’ அமைத்திருப்பர்.
ஆனால் நெல்லையப்பர் சன்னதியில் உள்ள கோமுகை சுவாமிக்கு பின்புறம் மேற்கு திசையில் விழும்படியாக இருக்கும். இந்த திசையின் அதிபதி மழைக்கடவுளான வருணன் ஆவார். அபிேஷகித்த தீர்த்தத்தால் மனம் மகிழ்ந்து இப்பகுதிக்கு மழைபெய்யச் செய்து குளிர வைக்கிறார் வருணன். இதனால் தாமிரபரணி ஜீவநதியாக உள்ளது. இதை போற்றும் விதமாக இங்கு தாமிரபரணி அம்மனுக்கும் சிலை உள்ளது. சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூச நாளில் இந்த அம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் ஆராட்டு செய்கிறார்கள். இந்நதியில் நீராடினால் பாவம் தீரும். அதைப்போல் இங்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் துவார பாலகியர்களாகிய கங்கை, யமுனை ஆகியோர் உள்ளனர்.