அன்னூர், தென்னம்பாளையம் சாலையில், நஞ்சுண்ட விநாயகர் சமேத, ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகம சாஸ்திரம் மற்றும் சிற்ப சாஸ்திர முறைப்படி, மகா மண்டபம், புதிய சாலஹாரம், கருங்கற்களால் மதில் சுவர் மற்றும் துவார கணபதி சன்னதியில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி காலை 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. மாலையில் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், விமான கலசம் நிறுவுதலும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இன்று காலை 8:15 மணிக்கு, நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன், விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (15ம் தேதி) முதல் மண்டல பூஜை நடைபெற உள்ளது.