பதிவு செய்த நாள்
15
நவ
2024
10:11
சேலம்; பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது அன்னலிங்கம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அதேபோல சஷ்டி முடிந்து வரும் ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேக வைபவம் நடைபெறுவது வழக்கம்
இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருக்கோவில் சுகவனேஸ்வரர் திருக்கோவில் இந்த திருக்கோவில் பொதுவாக பௌர்ணமி தினத்தில் தான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் ஆனால் சுயமாக உருவான சிவன் என்பதால் நட்சத்திரத்தின் அடிப்படையில் அன்னாபிஷேக வைபவம் நடைபெற்றது. அதிகாலை முதல் பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சுகவனேஸ்வரருக்கு சுமார் 500 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூலவர் சன்னதியில் அன்னத்தால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அன்னலிங்கத்தை சிவாச்சாரியார் தலையில் சுமந்தபடி திருக்கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பின்னர் கோவிலின் எதிரே உள்ள சிவன் தெப்பக்குளத்தில் மேளதாளம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னலிங்கம் குளத்தில் கரைக்கப்பட்டது தொடர்ந்து மூலவர் சிவனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்ட பின்னர் சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டுச் சென்றனர் விழாவில் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.