பதிவு செய்த நாள்
15
நவ
2024
11:11
டி.கல்லுப்பட்டி; மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி. கல்லுப்பட்டி அருகே வி.அம்மாபட்டியில் 7 ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரத் திருவிழா நடந்தது.
600 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி பகுதியில் நவாப்புகளின் படையெடுப்பு காரணமாக ஒரு மூதாட்டி ஆறு பெண் குழந்தைகளுடன் இப்பகுதிக்கு வந்தார். அவர்கள் வந்த பின்பே, டி கல்லுப்பட்டி பகுதியில் மழை பெய்து விவசாயம் செழித்ததாக நம்பிக்கை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அவர்களை அன்போடு கவனித்து வந்துள்ளனர். பின்னர் வளர்ந்த அந்த ஆறு பெண்களுக்கும் நாயக்கர் திருமணம் செய்து வைக்க முயன்ற போது அப்பெண்கள் தங்களை தெய்வக் குழந்தைகள் என்றும் ஆதிபராசக்தியின் வடிவம் ஆகிவிடுவோம் என்றும் கூறி ஜோதியில் மறைந்தனர்.
இந்த ஐதீகத்தின்படி தேவன் குறிச்சி, டி.கல்லுப்பட்டி, சத்திரப்பட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளாங்குளம் ஆகிய ஊர்கள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐப்பசியில் முத்தாலம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். முத்தாலம்மனை தேவன் குறிச்சியில் ஆதிபராசக்தி, டி. கல்லுப்பட்டியில் சரஸ்வதி, வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமி, வை. அம்மாபட்டியில் பைரவி, காடனேரியில் திரிபுரசுந்தரி, கிளாங்குளத்தில் சபரி கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர். அம்மா பட்டியில் ஏழு ஊர்களுக்கு அம்மன் உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு அவரவர் ஊர்களிலிருந்து தலைச் சுமையாக 6 சப்பரங்களை அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து முத்தாலம்மனை அவரவர் ஊருக்கு எடுத்துச் சென்று வழிபடுவது இத்திருவிழாவின் சிறப்பம்சம். 600 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இத்திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது.
நேற்று நடந்த சப்பரத் திருவிழாவுக்காக அம்மாபட்டியை தவிர பிற கிராமங்களில் சப்பரங்கள் செய்யும் பணி நடந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் தங்கள் ஊர் சப்பரத்தை வண்ணக் காகிதங்கள், மூங்கில் கொண்டு 33 அடி உயரம் முதல் 50 அடி உயரம் தயார் செய்தனர். முக்கிய நாளான நேற்று அந்தந்த கிராம மக்கள் தலைச் சுமையாக அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். கிளாங்குளம், சத்திரப்பட்டி சப்பரங்களை வயல்வெளியில் பக்தர்கள் சுமந்து வந்தனர். இதை அடுத்து வி. அம்மாபட்டியில் பச்சை மண்ணால் வடிவமைத்த 6 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி, திரண்டு இருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமி சிலைகளுக்கு அந்தந்த ஊர் நாட்டாமைகள் அம்மனுக்கு முதல் மரியாதை வழங்கினர். அதன்பின் ஆறு சப்பரங்களில் சிலைகளை வைத்து அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனர். முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்து பெண்கள் சாமி கும்பிட்டனர். ஏழு ஊர்களைச் சேர்ந்தவர்கள் எந்த ஊரில் வசித்தாலும் ஊருக்கு வந்து, ஜாதி பேதம், அரசியல் பாகுபாடு இன்றி ஒற்றுமையாக பங்கேற்பர். விழாவையொட்டி மதுரை-ராஜபாளையம் வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை பேரையூர் டி.எஸ்.பி துர்காதேவி தலைமையிலான போலீசார் செய்தனர்.