பதிவு செய்த நாள்
15
நவ
2024
03:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான புகழ்பெற்ற கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு மாயூரநாதர், ஸ்ரீவதான்யேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து காவிரியின் இரண்டு பக்க கரைகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இந்த ஆண்டு சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீரர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மயில் உருவில் அபயாம்பிகை அம்மன் சிவனை பூஜித்த மாயூரநாதர் ஆலயம், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர், ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி தென்கரையிலும், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திககள் காவிரி வடகரையில் எழுந்தருளி அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தென்கரையில் திருவாடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும் வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு கரைகளிலும் தீர்த்தவாரி உற்சவம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து அனைத்து சிவாலயங்களில் இருந்து எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்த காவிரி மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் இவ்விழாவை முன்னிட்டு 32 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி 300க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் காவிரி ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் நகர மன்ற தலைவர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் ராமசேயோன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.