பதிவு செய்த நாள்
15
நவ
2024
04:11
தஞ்சாவூர், - தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஐப்பசி மாதத்தில், ஆறுகளில் மாதந்தோறும் நீராடி முடியாவிட்டாலும், முதல்நாள் மற்றும் கடைசி நாள் நீராடினாலே புண்ணியப்பேறு அடைவார்கள் என்பது ஐதீகம். அதன்படி நேற்று ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான இன்று(15ம் தேதி), திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில், காவிரி ஆற்றில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அருகில் உள்ள ஐயாறப்பரை வழிப்பட்டு சென்றனர்.பிறகு, தர்மசம்வர்த்தினி அம்மனுடன் ஐயாறப்பர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்பமண்டபடித்துறையில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமானோர் பக்தர்கள் கலந்துக்கொண்டு காவிரியில் நீராடினர்.
நாகேஸ்வரன் கோவில்: இதை போல, கும்பகோணத்தில் பெரியநாயகி அம்மன் சமேத நாகேஸ்வர் கோவிலில், ஐப்பசி துவங்கிய நாளான கடந்த மாதம் 18-ம் தேதி முதல் கோவிலிருந்து அஸ்ரத்தேவர் புறப்பட்டு, காவிரி ஆறு பகவத் படித்துறைக்குச் சென்று, அங்கு அஸ்ரத்தேவருக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, ஐப்பசி கடைசி நாளான கடை முழுக்கையொட்டி, அஸ்ரத் தேவருடன், பஞ்ச மூர்த்திகள் சுவாமிகள் ரிஷப வாகனத்தில் கோயிலிருந்து புறப்பட்டு பிரதான வீதிகள் வழியாகக் காவிரி ஆறு பகவத் படித்துறைக்கு விமர்சையாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கு அஸ்ரத் தேவருக்குச் 21 வகையான மங்களப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அங்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் தீர்த்தவாரியை கண்டருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் அனைவரும் புனித நீராடி நாகேஸ்வரா, நாகேஸ்வரா, என முழக்கமிட்டபடி, தரிசனம் மேற்கொண்டனர்.