சிங்கம்புணரி; சிங்கம்புணரி பகுதி சிவன் கோயில்களில் இன்று அன்னாபிஷேகம் நடந்தது.
ஐப்பசி பௌர்ணமி அன்று வெள்ளை அன்னத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். அன்னம் காய்கறிகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அன்ன அலங்காரத்தை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். சிங்கம்புணரி அருகே பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் நடைபெற்ற விழாவில் பேஸ்கார் கேசவன் முன்னிலையில் உமாபதி சிவாச்சாரியார் அன்ன அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை நடத்தி வைத்தார். செந்தில், சண்முகம் தலைமையில் அன்னாபிஷேக விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஐந்து ஊர் கிராம மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கிராம மக்கள் முன்னிலையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சதுர்வேத மங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், சிவபுரி பட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில், உலகம்பட்டி உலகநாதர் உள்ளிட்ட கோயில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.