பதிவு செய்த நாள்
16
நவ
2024
09:11
மைசூரு; மைசூரு சாமுண்டி மலையில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டி மலை இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில், கன்னட கார்த்திகை மாதத்தில் நாளை நந்தி சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து, மைசூரில் நேற்று அறக்கட்டளை தலைவர் கோவிந்தா அளித்த பேட்டி: சாமுண்டி மலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூரு மன்னர் சாமராஜ உடையார் காலத்தில் ஒரே கல்லில் 18 அடி உயரம், 12 அடி அகலத்தில் நந்தி சிலை செதுக்கப்பட்டது. சாமுண்டி மலைக்கு படிக்கட்டு வழியாக நடந்து செல்லும் பக்தர்கள், நந்தி சிலைக்கு, பூஜை செய்வர். மீண்டும் படிக்கட்டு வழியாக மலை உச்சிக்குச் செல்வர். கன்னட கார்த்திகை மாதத்தில் வரும் 17ம் தேதி (நாளை) சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, நாளை காலை 8:00 மணிக்கு தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம், சிலை சுத்தம் செய்யப்படும். அதன்பின், பால், தயிர், மோர், தேன், நெய், பஞ்சாமிர்தம், இளநீர், எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி உட்பட 32 வகையான பொருட்களால் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து விதவிதமான மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்படும்.
சுத்துார் மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசியகேந்திர சுவாமிகள், மைசூரு ஹொச மடத்தின் மடாதிபதி சிதானந்த சுவாமிகள், மைசூரு ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி சோமநாதானந்த சுவாமிகள் தலைமையில் நாட்டின் நன்மைக்காகவும், மக்களின் நலத்திற்காகவும் சாமுண்டீஸ்வரி தாயிடம் பிரார்த்தனை செய்து, அபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்று மதியம் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்படும். இரவு 7:00 மணி மற்றும் மறுநாள் திங்கட்கிழமை இரவு 7:00 மணிக்கு நந்தி சிலையை சுற்றிலும்; படிக்கட்டுகளிலும் அகல் விளக்கு ஏற்றுவர். இவ்வாறு அவர் கூறினார்.