பதிவு செய்த நாள்
17
நவ
2024
06:11
அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில்,வரும் இருபதாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று சேவூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நாளை (திங்கள்)விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரஹணம்,ஸ்ரீ ஹரிஹர பஞ்சாசனம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால வேள்வி பூஜைகள் துவங்குகிறது. நாளை மறுதினம் ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆச்சார்ய வர்ண பூஜை, ஸ்ரீ பூமிநாதர் ஆச்சார்ய பூத சோதன அந்தர்மாத்ருகா பூஜை,ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு ரஜத பந்தனம், எந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.
இருபதாம் தேதி நான்காம் கால வேள்வி பூஜையில்,யாத்ரா தானம், கடம் புறப்படுதலுடன் அதிகாலை 4:50 மணிக்கு மேல் 5:15 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், பந்தள ராஜா பிரதிநிதி மூலம் திருநாள் ஸ்ரீ ஸ்ரீ சங்கர் வர்மராஜா தலைமையில், தாராபுரம் வரன் பாளையம் திருநாவுக்கரசர் மடாலயம் மௌனானந்த சிவாசலம் ஐயா மற்றும் அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மூலாலய மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மஹாபிஷேகம், மஹா தீபாரதனை, ஹரிவராசனம் ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.