காரமடை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2024 06:11
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை மகாத்மா காந்தி சாலை பகுதியில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு எம்.கே.கே.மோகன் தோட்டம் பகுதியில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முதல் கால வேள்வி பூஜை, இரவு 9 மணிக்கு விமான கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு 2ஆம் கால வேள்வி பூஜையும், 8.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சரவணம்பட்டி கௌமாரமடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமி செய்து வைத்தார். இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ், காரமடை தாசபளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கோவிந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,துணை தலைவர் விக்னேஷ் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.