பதிவு செய்த நாள்
17
நவ
2024
06:11
பெங்களூரு; கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், நாளை 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம், சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன், சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன், சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம் பெற்றான். கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வர். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே, அவரை குளிர்விக்கும் பொருட்டு, சங்காபிஷேகம் செய்வர். கார்த்திகை மாதம், சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன், நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே, சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க மாதத்தில், சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், கார்த்திகை சோமவாரமான, திங்கட்கிழமை தோறும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. நாளை காலை 10:00 மணிக்கு சங்கு கலச பூஜைகள் ஆரம்பமாகும். இதை தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உட்பட 16 திரவியங்களால் விஸ்வநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின் தாரா அபிஷேகம் நடக்கிறது. சகஸ்ரதாரை அபிஷேகம், கவ்ய சிருங்கம் எனும் நந்தியின் வாயிலில் இருந்து நீர் விழும் அபிஷேகம்; 108 சங்கு தீர்த்த அபிஷேகத்துக்கு பின், கலச அபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதம் நான்கு திங்கட்கிழமைகளிலும், இதுபோன்று சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. பூஜைகளை, பிரதான அர்ச்சகர் ராஜாபாலசந்திர சிவம், பிரகாஷ் சுவாமிகள் செய்துள்ளனர். விழா ஏற்பாடுகளை செய்துள்ள ஆர்.பி.வி.ஜி.சி.சி., டிரஸ்டிகள், சங்கு அபிஷேகத்தில் பங்கேற்குமாறு, பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.