திருப்பரங்குன்றம் தீபத்தூணிற்கு மூங்கில் தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2024 04:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி இன்று துவங்கியது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிச. 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச. 13ல் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. கோயில் சார்பில் ஆண்டு தோறும் மலைமேல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு ஹிந்து அமைப்பினர் கோரிக்கையை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஹிந்து முன்னணியினர் தடையை மீறி தீபத்தூணில் தீபம் ஏற்றினர். வழக்கமாக கோயிலில் திருவிழா கொடியேற்றிய சில தினங்களுக்கு பின்பு தீபத்தூணை சுற்றிலும் மூங்கில் கம்புகளால் தடுப்புகளால் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த ஆண்டு இன்று அப்பணி துவங்கியுள்ளது. மலைமேல் 16 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில நாட்களில் தீபத்தூணிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.