பதிவு செய்த நாள்
27
நவ
2012
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய விழாவான மஹா தீபம் இன்று நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது, மாலை, 6 மணிக்கு, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபம் ஏற்றப்படுகிறது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இது குறித்து கலெக்டர் விஜய்பிங்ளே நிருபர்களிடம் கூறியதாவது: கார்த்திகை தீப திருவிழாவுக்கு, 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அடிப்படை வசதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அந்தந்த பஞ்சாயத்துக்கள் சார்பிலும் செய்யப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் நிறுத்த, ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளன. 2,000 சிறப்பு பஸ்கள், நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன, பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மலை மீது ஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.