பதிவு செய்த நாள்
21
நவ
2024
10:11
சின்னமனூர்; சின்னமனுார் லெட்சுமி நாராயணப் பெருமாள், பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று பாலாலயம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னமனூர் லெட்கமி நாராயணப் பெருமாள் பழமையும், சிறப்பும் பெற்ற கோயில் ஆகும். பெருமாள் திருப்பதியில் கையை கீழ் நோக்கியும், காஞ்சியில் ஆசி வழங்குவது போன்றும் இருப்பார். இங்கு கன்னிகாதானம் செய்வது போன்ற தானகஸ்த கோலத்தில் நின்றுள்ளார். 9 அடி உயர நின்ற கோலத்தில் வேறு எங்கும் இல்லை. பெருமாள் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பம்சமாகும்.சிறப்பு பெற்ற இக்கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் 2005 ல் நடைபெற்றது. ஒவ்வொரு 12 ஆண்டிற்கு பின் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது அவசியம். இக்கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகளாகி விட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஹிந்து அறநிலைய துறை திருப்பணி செய்ய முன் வந்துள்ளது. நேற்று கோயில் வளாகத்தில் பாலாலயம் நடந்தது. மூலவருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விமானத்திற்கு பாலாலய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துர்கா நிறுவனங்களின் சேர்மன் வஜ்ரவேல், காயத்ரி பெண்கள் மெட்ரிக் பள்ளி தாளாளர் விரியன் சாமி, கார்த்திக், குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நதியா செய்திருந்தார்.
23 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்; தென்கரை வரதராஜப் பெருமாள் கோயில் நூற்றாண்டு பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மூலவர் வரதராஜப் பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அருகே பெருந்தேவி தாயார், வீர ஆஞ்சநேயர், கருடாழ்வார், நவக்கிரகங்களுக்கு தனி சன்னதியும், விநாயகர், நாகர் உட்பட ஏராளமான பரிவார தெய்வங்கள் உள்ளது. வரதராஜப் பெருமாள் கள்ளழகராக ஆற்றில் இறங்கும் விசேஷ வைபவம், பவித்திர பூஜைகள் நடக்கும். இக்கோயிலில் 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோயில் விமான (கோபுரம்) பாலாலயம் மற்றும் யாக பூஜை நடந்தது. உபயதாரர்கள் ஏற்பாட்டில் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயில் ஆய்வாளர் தனலட்சுமி, செயல் அலுவலர் சுந்தரி, பக்தர்கள் பங்கேற்றனர்.