பதிவு செய்த நாள்
21
நவ
2024
10:11
சிவகங்கை; கார்த்திகைக்கு கோயில், வர்த்தக நிறுவனம், வீடுகளில் விளக்கேற்ற, மண்ணுக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்தாலும், தொடர் மழையால் அந்த விளக்குகளை காய வைக்க முடியவில்லை என தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
டிச., 13 ல் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இத்திருநாளில் தமிழகத்தில் உள்ள கோயில், வர்த்தக நிறுவனம், வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். கார்த்திகை திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளுக்கு மானாமதுரையில் இருந்து மண் அகல்விளக்குகளை வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்வார்கள். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அகல்விளக்கு தயாரித்தாலும், மானாமதுரை மண்ணுக்கே உரிய தரத்துடன் அகல்விளக்குகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதனால், மானாமதுரையில் இருந்து கார்த்திகை விளக்குகளை வாங்கி செல்லத்தான், வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மானாமதுரையில் 300 மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் ‘சீசனுக்கு’ ஏற்ப மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை விழாவிற்காக 5 முகம் முதல் 21 முகம் வரையுள்ள அகல், சரவிளக்கு, சங்கு, தேங்காய் விளக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு ஒரு மண் விளக்கின் விலை ரூ.15 முதல் சரவிளக்குகள் ரூ.1000க்கு விற்கப்படுகின்றன. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: தொடர்ந்து 2 மாதங்களாக கார்த்திகை விளக்குகள் தயாரித்து வருகிறோம். இம்மாவட்டத்தில் 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், தயாரித்த மண் விளக்குகளை வெயிலில் உலர்த்த முடியாமல் அவதிப்படுகிறோம். பலத்த மழை காலங்களில் மண்பாண்ட கூடங்களில் மழை நீர் புகுந்தும் சில பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. மழை காலங்களில் கார்த்திகை விளக்கினை தடையின்றி தயாரிக்க தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும், என்றனர்.