பதிவு செய்த நாள்
22
நவ
2024
10:11
சபரிமலை : கேரளாவின் சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்திலான பொருள்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை முதலீடாக மாற்றுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்து, அதற்காக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதை ஏற்ற நீதிபதிகள், 227 கிலோ தங்கத்தை முதலீடாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கொண்டு வந்துள்ள தங்க முதலீடு திட்டத்தில் டிபாசிட் செய்யலாம். இதிலிருந்து கிடைக்கும் வட்டியை தனிக்கணக்கில் சேமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே கொச்சி, குருவாயூர் தேவசம்போர்டு இந்த திட்டத்தில், 869 கிலோ தங்கத்தை முதலீடு செய்துள்ளது. 2019 முதல், இதற்காக, 13 கோடியே 56 லட்சம் ரூபாயை வட்டி வருவாயாக பெற்றுள்ளது.
வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்; சபரிமலை வர முடியாத பக்தர்களின் வேண்டுகோள்படி, கடந்த பல ஆண்டுகளாக, பக்தர்களின் வீடுகளுக்கு பிரசாரம் அனுப்பும் திட்டத்தை தபால் துறையும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் செயல்படுத்துகின்றன. அதன்படி பிரசாதம் முன்பதிவு இந்தியாவில் எந்த போஸ்ட் ஆபீஸில் இருந்தும் செய்ய முடியும். குறிப்பிட்ட நாளில் வீடு தேடி வரும். ஒரு பிரசாத பாக்கெட்டில் அரவணை, அபிஷேக நெய், விபூதி, அர்ச்சனை பிரசாதம், மாளிகை புறத்தம்மன் குங்குமம், மஞ்சள் இருக்கும். ஒரு டின் அரவணை அடங்கிய கிட், 520 ரூபாய். சபரிமலையில் 39 லட்சம் டின் அரவணை ஸ்டாக் உள்ளது. சீசன் தொடங்குவதற்கு முன், 40 லட்சம் டின் ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது. சீசன் தொடங்கிய பிறகும் தொடர்ந்து உற்பத்தி நடப்பதால் ஸ்டாக் அப்படியே தொடர்கிறது.
சபரிமலை ரோப்வே திட்டத்திற்கு நிலம் ஒப்படைப்பு; சபரிமலையில் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்துக்கான பொருள்கள் மற்றும் உணவு, பிரசாதம் தயாரிப்புக்கான பொருள்கள் கழுதையில் எடுத்து வரப்பட்டன. பின், டிராக்டருக்கு மாற்றப்பட்டது. டிராக்டர்கள் வந்து செல்லும் வேகம் பக்தர்களுக்கு உயிர் அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதையடுத்து, சபரிமலையில் ரோப்வே திட்டத்திற்கு, 17 ஆண்டுகளுக்கு முன் வடிவம் கொடுக்கப்பட்டது. ஆனால், வனத்துறையின் தொடர் எதிர்ப்பால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, இந்த திட்டம் நனவாகும் நிலைக்கு வந்துள்ளது.
பம்பை ஹில்டாப் முதல் சன்னிதானம் வரை, 2.7 கி.மீ.,யில் 250 கோடி ரூபாய் செலவில் ரோப்வே அமைகிறது. அதன்பின், சன்னிதானத்தில் இருந்து, 10 நிமிடத்தில், பம்பைக்கு செல்ல முடியும். மாளிகைபுரத்தின் பின்புறம் அன்னதான மண்டபத்துக்கு அருகே பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டடங்களை உடைத்து, ரோப்வே ஸ்டேஷன் அமைகிறது. ரோப்வே அமைவதற்காக வனத்துறை வழங்கும் நிலத்துக்கு பதிலாக, கொல்லம் மாவட்டம் செந்துாரணி வனவிலங்கு சரணாலயத்தின் அருகே கட்டில பாறையில் வருவாய் துறைக்கு சொந்தமான, 9 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று திருவனந்தபுரத்தில் கையெழுத்தானது. இதில், தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன், வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன், வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த், அதிகாரிகள் பங்கேற்றனர்.