பதிவு செய்த நாள்
21
நவ
2024
04:11
கூடலுார்; சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பாண்டித்தாவளத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி வழியாக பம்பை வரை 129 கி.மீ., தூரம் வாகனத்திலும், அங்கிருந்து 6 கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து சென்றால் சன்னிதானத்தை அடையலாம். அதே வேளையில் குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு வழியாக சத்திரம் வரை 21 கி.மீ., தூரம் ஜீப்பில் சென்று அங்கிருந்து 12 கி.மீ., தூரம் காட்டுப் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடைந்து விடலாம். மேலும் இவ்வழியாக செல்பவர்கள் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படாது. அதனால் தற்போது சத்திரம், புல்மேடு காட்டுப் பாதையை பக்தர்கள் அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். முதல் நாளில் 412 பக்தர்கள் இப்பாதையில் நடந்து சென்றனர். அதன்பின் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்திரத்திலிருந்து காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே காட்டுப் பாதையில் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்களுக்கு காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. அதனால் இதற்கு ஏற்றார் போல் பக்தர்கள் பயணத்தை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காட்டுப் பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு உதவுவதற்காக பாண்டித்தாவளத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.