பதிவு செய்த நாள்
22
நவ
2024
10:11
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பின்பு புதிய வடம் அமைக்கப்படுகிறது.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு தோறும் மார்கழி ஆருத்ர தரிசனம், ஆனி திருமஞ்சனம் என, இருபெரும் தரிசன விழாக்கள் நடந்து வருகிறது. இரு தரிசன விழாக்களின்போதும், நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் விமர்சியாக நடந்து வருகிறது. தேரோட்டத்தில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சாமிகளும் தனித்தனி தேரில் எழுந்தருள்வர். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த ஆனி திருமஞ்சன தேரோட்டத்தின் போது, அம்மன் தேரின் வடம் திடீரென அறுந்தது. அதன் பின்பு வேறு வடம் கொண்டு வரப்பட்டு இணைத்து தேர் நிலைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின்பு, சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு வடம் செய்யும் பணி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நடந்து வருகிறது. சிதம்பரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், 7 லட்சம் ரூபாய் செலவில் 5 தேர்களுக்கான வடம் செய்யும் பொறுப்பை ஏற்று, செய்து வருகிறார். தென்னை விவசாயம் அதிகம் உள்ள, சிங்கம்புணரியில், கயிறு உற்பத்தி அதிகளவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில் தேர்களுக்கு இங்கிருந்து வடம் செய்து அனுப்பப்படுகிறது. தற்போது, சிங்கம்புணரி, சேவுகப்பெருமாள் ஐயனார் கோவில் வளாகத்தில் தேர்களுக்கான வடம் செய்யும் பணியில், சுமார் 40 ஊழியர்கள் ஈடுபட்டு, பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. தற்போது, 3 மாதங்களாக நடந்து வரும், தேர் வடம் செய்யும் பணிகள், 40 டன் தேங்காய் நாரில் தயாராகி வருகிறது. 19 இன்ச் சுற்றளவுள்ள வடமானது, நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் ஆகிய 3 தேர்களுக்கும் தலா 460 அடியும், விநாயகர். சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு தலா 180 அடியும் வடம் செய்யும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. வரும் ஜனவரி 4 ம் தேதி ஆருத்ரா தரிசன விழா துவங்கி, 12 ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. அத்தேரோட்டத்தில், புதிய வடம் அமைத்து தேரோட்டம் நடைபெறும். புதிய தேர் வடம் அடுத்த மாதம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரவழைத்து ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. 30 ஆண்டுகளுக்கு பின்பு, சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்களுக்கு புதிய வடம் அமைத்து தேரோட்டம் நடைபெற உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.