பதிவு செய்த நாள்
22
நவ
2024
04:11
மூணாறு; சத்திரம், சபரிமலை இடையே காட்டு பாதையில் குடிநீர், வெளிச்சம் ஆகியவை இன்றி ஐய்யப்ப பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக காட்டு பாதையில் சபரிமலைக்கு பக்தர்கள் எளிதில் நடந்து செல்லலாம். அந்த பாதை நவ.16 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சத்திரம், சபரிமலை இடையே 12 கி.மீ. தூரம் உள்ளது. அந்த பாதையை சீரமைத்து, குடிநீர், தற்காலிக கழிப்பறை, வெளிச்சம் உள்பட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் வனத்துறை உள்பட பல்வேறு துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால் சபரிமலை மண்டல, மகர விளக்கு உற்ஸவம் துவங்கி எட்டு நாட்கள் ஆகியும் காட்டு வழியில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. குறிப்பாக பாண்டிதாவளம், கழுதைகுழி இடையே குடிநீர், வெளிச்சம் ஆகிய வசதிகள் இல்லை. அப்பகுதி பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்டது என்பதால் யானை, காட்டு பன்றிகள் உள்பட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. தவிர வெளிச்சம் இல்லாததால் கரடு, முரடான பாதையில் பக்தர்கள் டார்ச், அலைபேசி ஆகிய வெளிச்சத்தில் கடந்து செல்கின்றனர். கடந்தாண்டு வரை சத்திரத்தில் இருந்து காலை 7:00 முதல் பகல் 2:00 மணி வரை சபரிமலை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தாண்டு காட்டு பாதையில் வெளிச்சம் வசதி செய்யாததால் காலை 7:00 முதல் பகல் 1:00 வரையாக குறைக்கப்பட்டது. கழுதைகுழி பகுதியில் நேற்று சிக்கிய திண்டுக்கல்லை சேர்ந்த மூன்று ஐய்யப்ப பக்தர்கள் குடிநீர் இன்றி தவித்ததாகவும் தெரியவந்துள்ளது.