பதிவு செய்த நாள்
23
நவ
2024
07:11
சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் இல்லாத நிலையிலும் காணிக்கை வருமானம் அதிகரித்துள்ளதால் தேவசம்போர்டு அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நவ.,16-ல் சபரிமலையில் மண்டல காலம் தொடங்கியது. தினமும் 80 ஆயிரம் பக்தர் களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும் சராசரியாக 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வராமல் உள்ளனர். இதனால் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் தரிசனம் நடத்தி ஊர் திரும்புகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இல்லாத நிலையிலும் காணிக்கை வருமானம் அதிகரித்துள்ளது. நவ., 20 வரை காணிக்கையாக ரூ. 3.18 கோடி, அரவணை விற்பனையில் ரூ.9.52 கோடி, அப்பம் விற்பனையில் ரூ.1.26 கோடியும் கிடைத்துள்ளது. அரவணை விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.2.16 கோடி அதிகமாகும். அப்பம் விற்பனை ரூ.22.40 லட்சம் அதிகரித்துள்ளது. கவுண்டர்களில் கூட்டம் குறைவாக உள்ளதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் தேவையான பிரசாதங்களை பெற்று செல்வதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சபரி மலையில் அப்பம் பிரசாதத்தில் காளான் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியானதை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் மறுத்துள்ளார். அப்பத்தின் கால அளவு ஏழு நாட்கள். அப்பம் கவுண்டரில் இருந்து வாங்கப்பட்டபோது இது காணப்படவில்லை. பிரசாதத்தை இருமுடி கட்டில் வைத்து கட்டி வீட்டில் கொண்டு போய் பல நாட்களுக்குப் பின் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் கூட்டு சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் அது பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.