பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றின் கிழக்கு கரையில், மதுக்கரவேணி அம்பாள் சமேத அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. தேவராப்பாடல் பெற்ற இக்கோவில், கி.பி., 1454ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டதாக, தல வரலாறுகள் கூறுகின்றன. இக்கோவிலில், மூலவர் முன் மண்டபத்தில் ஒரு நிலவறையும், மதுக்கரவேணி அம்பாள் சன்னதி இடது புறத்தில், மற்றொரு நிலவறையும் உள்ளது. பண்டைய காலத்தில் கருவூலங்கள் இல்லாததால், கோவில்களில் ஸ்வாமிக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வைரம் போன்ற நகைகள் ரகசிய அறைகளிலும், நிலவறையிலும் வைத்து பாதுகாக்கப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர், அசலதீபேஸ்வரர் கோவிலில் உள்ள, இரண்டு நிலவறைகள் திறக்கப்படாமல் உள்ளது. மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு சொந்தமான நகைகள், இரண்டு நிலவறையிலும் வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம், என ஆன்மிக அன்பர்கள் தெரிவித்தனர். இது பற்றி, தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என, கடந்த, 22ம் தேதி, "காலைக்கதிர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் அம்சவேணி, கோவில் செயல் அலுவலர் சிவகாமசூரியன், கணக்காளர் சங்கரன் ஆகியோர், நேற்று கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோவிலில் உள்ள நிலவறைகளை பார்வையிட்டனர். மதுக்கரவேணி அம்பாள் சன்னதி இடதுபுறம் உள்ள அறையை திறந்து, பார்வையிட்டனர். அங்கு நிலவறை இருப்பதை உறுதி செய்தனர். அதே போல் மூலவர் சன்னதி முன் உள்ள மண்டபத்தில், டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளதால், அதை பார்வையிட முடியவில்லை. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நிலவறை குறித்து ஆய்வு செய்துள்ளோம். அது தொடர்பான அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்போம். மேற்கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பர், என்றனர்.