பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
காரைக்குடி: குன்றக்குடி மலையில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில், திருக்கார்த்திகையையொட்டி, நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் ஒரு மணிக்கு, சுவாமி மலையிலிருந்து கீழிறங்கி கார்த்திகை மண்டபத்தை வந்தடைந்தார். மாலையில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பரணி தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தினார். கார்த்திகை மண்டபத்தில், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்ட பின், சுவாமி மலையை நோக்கினார். அப்போது, மலையில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பின்பு சுவாமி வீதி உலா நடந்தது.பிரான்மலையில் தீபம் பார்த்து சிங்கம்புணரி பகுதி யில் நூற்றுக்கும்மேற்பட்ட கிராம மக்கள் கார்த்திகை விரதம் நிறைவேற்றினர்.மலை தீபம் ஏற்றும் குழுவினர் நேற்று காலை மங்கைபாகர் கோயிலிலிருந்து மலை உச்சிக்கு சென்றனர்.மாலை 5 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.மங்கை பாகர்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.லட்ச தீபம் ஏற்றப்பட்டது. மானாமதுரை: மானாமதுரையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி ஆனந்தவள்ளி அம்மன் கோவில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், வழிவிடுமுருகன்கோவில், நம்பி நாகம்மாள் கோவில், ஆற்றுப்பால பிள்ளையார் கோவில், வீர அழகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.மாலை கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.சிவகங்கையில் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.