மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2024 03:11
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. அறநிலையத்துறை, பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு, உபயதாரர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இன்று நடந்த கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜையில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன், பழனி பாதையாத்திரை பக்தர்கள் குழு சார்பில் தண்டபாணி, வஜ்ரவேல், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் உபயதாரர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறநிலையத் துறையினர் கூறியதாவது: கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமான பாலாலய பூஜைகளுக்கு பின் ராஜகோபுரம் உட்பட 3 கோபுரங்கள், கொடிமரம், கோயில் கருவறை, பரிவார தெய்வங்கள் உள்ள இடங்கள் ஆகியவற்றை புனரமைக்க அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொடிமரம் மற்றும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூச திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் முன்புறம் சிதிலமடைந்து ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டு புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளையும் இன்னும் சில மாதங்களில் முடித்தபின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு கூறினர்.