பதிவு செய்த நாள்
29
நவ
2024
12:11
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக கொண்டு வரப்பட்ட 52 கலசங்களுக்கு, ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் சிறப்பு பூஜை நா.மூ.சுங்கத்தில் நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கடந்த, 2010ம் ஆண்டு டிச., மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நிறைவடைந்து, 14 ஆண்டுகள் ஆனதால், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. கும்பாபிஷேகம் வரும் டிச., 12ம் தேதி காலை, 9:00 முதல், 9:45 மணிக்குள் நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று கும்பாபிஷேக விழாவுக்காக கொண்டு வரப்பட்ட 52 கலசங்களுக்கு, ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் சிறப்பு பூஜை நா.மூ.சுங்கத்தில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.