மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த பழையனுார் ஊராட்சியில், மரகதவல்லி தாயார் உடனுறை மாகாளீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், புதிதாக சபரி சாஸ்தா அய்யப்ப சுவாமி கோவில் கட்டப்பட்டு, பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேகம் செய்ய கிராம பொது மக்களால் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 26ல், ஆச்சார்யா வர்ணம், வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை நடந்தது. இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. இன்று கணபதி ஹோமம், சம்ஹாரத்துவ ஹோமம், ஆதிவார்த்த பூஜை மற்றும் அய்யப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின், காலை 9:15 மணியளவில், கோவில் கோபுர கலசங்களுக்கு, யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரால், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மஹாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, சபரி சாஸ்தா அய்யப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாட்டினை, பழையனுார் கிராம பொதுமக்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.