பதிவு செய்த நாள்
30
நவ
2024
10:11
ராம்நகர்; கவுடகெரேவின், சாமுண்டீஸ்வரி கோவில் நிர்வாகம், சிறார்களுக்காக புதிய உலகத்தையே உருவாக்கியுள்ளது. இந்த உலகத்தை சிறார்கள் இலவசமாக சுற்றி பார்க்கலாம். ராம்நகர், சென்னப்பட்டணாவின், கவுடகெரேவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், பிரசித்தமான திருத்தலமாக விளங்குகிறது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் குவிகின்றனர். இங்கு குடிகொண்டுள்ள சாமுண்டீஸ்வரி தேவி சக்தி வாய்ந்தவர். பல அற்புதங்களை நிகழ்த்துகிறார். ஆன்மிக தலமாக இருந்தாலும், சிறார்களின் அறிவை வளர்க்கும் கூடமாகவும் விளங்குகிறது. இங்கு சிறார்களுக்காக, புதிய உலகத்தை உருவாக்கி வைத்துள்ளனர். பெற்றோருடன் வரும் சிறார்களுக்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமே, கோவில் நிர்வாகம் இந்த அறிவியல் உலகத்தை உருவாக்க காரணமாகும். செயற்கையான முறையில், செவ்வாய் கிரகம், சந்திரலோகம், ராக்கெட் ஏவுதல் உட்பட சிறார்களின் கல்விக்கு தேவையான பல்வேறு அம்சங்களை உருவாக்கி உள்ளனர். கவுடகெரே சாமுண்டீஸ்வரி கோவிலில், லட்ச தீபோற்சவம் நாளை நடக்கவுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருவர். இவர்களுடன் வரும் சிறார்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதை இலவசமாக பார்த்து மகிழலாம். கட்டணம் ஏதும் இல்லை.