திருச்செந்தூர் கடற்கரையில் 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2024 10:12
திருச்செந்தூர்; திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக கடற்கரையில், பவுர்ணமி, அமாவாசை தினங்களில் கடல் நீர் உள்வாங்குவது வழக்கம். கடந்த சில தினங்களாக 80 அடி தூரத்துக்கும் உள்வாங்கியதால் பாறைகள் பாசி படர்ந்து பச்சை நிறமாக தெரிந்தன. கடல் உள்வாங்கிய பகுதியில் 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு தென்பட்டுள்ளது. அதை பக்தர்கள் மீட்டு கடல்பாறை மீது வைத்து சென்றனர். அதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள் சுதாகர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டனர். கல்வெட்டைப் படியெடுத்து, மைதா மாவு பூசி படித்தனர். அதில் மாதா தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் குறித்து தகவல்கள் உள்ளன. திருச்செந்தூரில் தற்போது நாழிக்கிணறு தீர்த்தம் மட்டுமே பிரசித்தமாக உள்ளது. ஆனால் கடற்கரையில் 24 தீர்த்தங்கள் இருந்துள்ளன என்பது செவி வழிச் செய்தியாக இருந்தது. தற்போது கல்வெட்டு மூலம் உறுதியாகி உள்ளது. கல்வெட்டை முழுமையாக படித்தால் புதிய தகவல்கள் தெரிய வரலாம்.