மயிலாடுதுறை; சீர்காழி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம், 1008 சங்கபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. உமையம்மை ஞானப்பால் அளித்ததால் திருஞான சம்பந்த பெருமான் தேவாரத்தின் முதல் பதிகம் அருளிய தலமாக விளங்கி வருகிறது. இங்கு பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் ஆகியோர் 3 நிலைகளில் மலைக்கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கோவிலின் தென்புறத்தில் அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் காசிக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. இங்கு வழிபட ஞானம் பெருகி, சகல ஐஸ்வர்யம் கிடைப்பதுடன், சட்டம் சார்ந்த பிரச்சனைகள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்று கார்த்திகை மாத மூன்றாம் சோமவாரம் பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி சன்னதியில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. மாலை பூர்ணாஹுதி, தீபாராதனை நடத்தப்பட்டு, சங்குகளில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு ஹோமத்தை கோவில் குருக்கள் செய்து வைத்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர்.