பதிவு செய்த நாள்
03
டிச
2024
11:12
இயற்கை எழில் கொஞ்சும், பசுமையான கானகத்தின் நடுவில் கமண்டல கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. பக்தர்கள் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிக்கமகளூரு, கொப்பாவின், கெசவே என்ற குக்கிராமத்தில் கமண்டல கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றாலும், இதை பற்றி பலருக்கும் தெரியவில்லை. கமண்டல கணபதியின் சக்தியை பற்றி கேள்விபட்டவர்கள், கோவிலை தேடி கண்டுபிடித்து தரிசனம் செய்கின்றனர். தேவலோகத்தில் இருந்த பார்வதியை, ஒரு முறை சனி தோஷம் பிடிக்கிறது. தோஷத்தை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது என்பது குறித்து, தேவர்களிடம் கேட்டார். அவர்களும் பூலோகத்துக்கு சென்று, தவம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என, ஆலோசனை கூறுகின்றனர்.
அதன்படி பார்வதி பூலோகத்துக்கு வந்து, மிருகவதே என்ற இடத்தில் தவம் செய்கிறார். அதன்பின் கெசவே கிராமத்துக்கு வந்த பார்வதி, விநாயகரை பிரதிஷ்டை செய்து மீண்டும் தியானத்தில் ஆழ்கிறார். அவரது சனி தோஷம் நீக்குகிறது. தான் பிரதிஷ்டை செய்த கணபதிக்கு தண்ணீர் கொண்டு வர செல்கிறார். எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் வேண்டும் என, பிரம்ம தேவரிடம் வேண்டுகிறார். அப்போது பிரம்ம தேவர் தோன்றி, அம்பை எய்து கமண்டலத்தில் இருந்து தண்ணீர் பெருக்கெக்கும்படி செய்கிறார். பிரம்ம தேவர் உருவாக்கிய தண்ணீர், நாளடைவில் பிராம்ஹி என்ற பெயரில் நதி பாய்கிறது. இந்த இடத்தில் கோவில் கட்டி, கமண்டல கணபதி கோவில் என, அழைக்கப்படுகிறது. கணபதி கோவிலின் கர்ப்பகுடியில் உற்பத்தியாகும் பிராம்ஹி நதி, பாய்ந்து சென்று கோவிலின் எதிரில் உள்ள தீர்த்த குளத்தில் விழுகிறது. இதில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து தீர்த்த குளத்தில் புனித நீராடி, கணபதியை தரிசிக்கின்றனர். அது மட்டுமல்ல, இந்த குளத்தின் நீரை குழந்தைகளுக்கு புகட்டினால், நினைவு சக்தி அதிகரிக்கும். தேர்விலும் நல்ல மதிப்பெண் பெறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். தீராத சரும நோய்களும் குணமாகின்றன. கோவிலில் அருள் பாலிக்கும் கமண்டல கணபதி, தியானம் செய்யும் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இத்தகைய விக்ரகம் மிகவும் அபூர்வம். ஆண்டின் அனைத்து நாட்களிலும், தீர்த்த குளத்தில் தண்ணீர் ஊற்றெடுப்பது ஆச்சரியமான விஷயமாகும். மழைக்காலத்தில் பிராம்ஹி நதியின் நீர், கணபதியின் பாதங்களை தொட்டு செல்கிறதாம். கோடைக்காலத்தில் நீர் வரத்து ஓரளவு குறையுமே தவிர வற்றுவது இல்லை.