பதிவு செய்த நாள்
06
டிச
2024
10:12
வாலாஜாபாத்; காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து, 10 கி.மீ., துாரத்தில் இளையனார்வேலுார் உள்ளது. இப்பகுதியில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலான பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில் உள்ளது.
தல புராணங்களின்படி, இளையானார்வேலுாருக்கு அருகே காசிய முனிவர் உலக நலன் வேண்டி யாகத்தில் ஈடுபட்டு இருந்தார். முனிவரின் யாகத்தை மகரன், மலையன் என்னும் இரு அரக்கர்கள் தடுத்து தொல்லை கொடுத்ததாகவும், இதுகுறித்து காசிய முனிவர் சிவபெருமானிடம் வேண்டினார். அரக்கர்களை அழித்து, முனிவரின் யாகம் நடைபெற உதவுமாறு முருக பெருமானுக்கு சிவபெருமான் கட்டளையிட்டார். முருக பெருமான் அந்த இரு அரக்கர்களையும் வேல் கொண்டு அழித்ததாகவும், அப்போது மகரன் தலை விழுந்த இடம் மாகரல் எனவும், மலையன் தலை விழுந்த இடம் மலையான்குளம் எனவும், அரக்கர்களை வதம் செய்த பிறகு முருகபெருமான் வேல் வீசிய இடம் இளையனார்வேலுார் எனவும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. இந்நிலையில் இளையனார்வேலுார் பாலசுப்பிரமணியம் சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை சார்பில்தீர்மானிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, நேற்று மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி, யாகசாலை அமைத்து கடந்த 3 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து, புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னிதிகோபுரம், பரிவார சன்னிதி கோபுரங்களில் மந்திரங்கள் ஓத புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. விழாவில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.