பதிவு செய்த நாள்
09
டிச
2024
10:12
தாண்டிக்குடி; திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கோயில் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சேற்றாண்டி வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக வந்தனர். தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேற்றாண்டி வேடம் அணிந்தனர். பாரம்பரியமாக கொடைக்கானல் மலைக் கிராமத்தில் தாண்டிக்குடியில் மட்டும் இந்நடைமுறை உள்ளது. உடல் முழுவதும் சேறு பூசி வலம் வருவதால் கிராமத்தில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி நேற்று இங்குள்ள வயல்களத்தில் மண்ணை குவித்து சேற்றை வாரி உடல் முழுமையும் பக்தர்கள் ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
ஒற்றுமை வலுப்பெறும்; கணேசன்,கிராம பட்டக்காரர்: தாண்டிக்குடியில் சேற்றாண்டி வேடம் அணிவது பாரம்பரியத்தில் உள்ளது. இதன் மூலம் கிராமத்தில் நோய்கள் நீங்கி, விவசாயம் செழித்து ஒற்றுமை வலுப்பெறுகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆண்டு தோறும் சேற்றாண்டி வேடமணிவதை நேர்த்திக்கடனாக செய்கின்றனர்.
நோய்கள் தீரும்; இளங்கோவன், கிராம கோயில் மேலாளர் : சேற்றாண்டி வேடத்தில் உடல் முழுவதும் மண் பூசி கொள்வதால் தோல் நோய்கள் ,இதர பிற நோய்கள் தீரும். சீனாவில் இன்றளவும் மண் குளியல் சிகிச்சை நடைமுறையில் உள்ளது. இதை தாண்டிக்குடி மலை கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் விழாவில் ஆண்டுதோறும் கடைபிடிக்கிறோம்.