மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானத்தின் குருபூஜையில் திரளான அடியார்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் 14ம் நூற்றாண்டில் குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான சைவ ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிய பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவ பரிபூரணமடைந்தார். இவரது குருபூஜை ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சதயம் நட்சத்திர திருநாளில் நடைபெறும். இவ்வாண்டு கார்த்திகை மாதம் சதயம் நட்சத்திர திருநாளான நேற்று திருவாவடுதுறையில் உள்ள மறைஞான தேசிகர் தபோவனத்தில் உள்ள 23வது குரு மகா சன்னிதானத்தில் குருமூர்த்தத்தில் குருபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை திருமுறை இன்னிசையும், குருபூஜை அபிஷேகம், சொற்பொழிவு நடந்தன. மதியம் 12 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் 23 வது குருமகா சன்னிதானத்தின் குருமூர்த்தத்திற்கு மகா தீபாராதனை செய்து வழிபட்டார். தொடர்ந்து குருபூஜை நூல்களை குருமகா சன்னிதானம் வெளியிட மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் குருபூஜையில் கலந்து கொண்ட அடியார்களுக்கு குருமகா சன்னிதானம் அருட்பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து ஆதின திருமடத்தில் மாகேஸ்வர பூஜை நடந்தது.