திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப திருவிழா ஏழாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளில் ஒருவரான விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதன் பிறகு முருகன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தேர் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேரோட்டத்தில் அரோகரா கோஷத்துடன் அண்ணாமலையார் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ராஜகோபுரம் முன் கரும்பு தொட்டில் குழந்தை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 13ல் காலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.