பதிவு செய்த நாள்
11
டிச
2024
02:12
பாலக்காடு; கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் ஏகாதசி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் இன்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கிழக்கூட்டு சசி மாரார் தலைமையில், செண்டை மேளம் முழங்க, இந்திரசென் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை, 9:00 மணிக்கு, பார்த்தசாரதி கோவிலுக்கு, குனிச்சேரி அனியன் மாரார் தலைமையில், பஞ்சவாத்தியம் முழங்க, கோகுல் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்பட்டது. ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்ட நடை, நாளை (12ம் தேதி) காலை, 7:00 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு, மாலை, 3:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படும். ஏகாதசி உற்சவம் 13ம் தேதி நிறைவுபெறும். விழாவையொட்டி, கடந்த நவ., 26ம் தேதி, கோவில் முன்பாக உள்ள மேல் ப்புத்தூர் கலையரங்கில் துவங்கிய, செம்பை சங்கீத உற்சவம், இன்று இரவு, 10:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பிடித்தமான கீர்த்தனைகள் பாடலுடன் நிறைவடைகிறது. இந்த 15 நாள் உற்சவத்தில், மூவாயிரத்திற்கும் மேலான கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.