பதிவு செய்த நாள்
11
டிச
2024
04:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் 13 ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 13ம் தேதி, பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை நாளை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும், மஹா தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்களும் ஒலித்தவாறு, தீபதிருவிழா களை கட்டியுள்ளது.