தொண்டாமுத்துார்; தென் கயிலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று மஹா தீபம் ஏற்றப்படுகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென் கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், சுயம்பு வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கும், ஏழாவது மலை உச்சியில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று, மஹா தீபம் ஏற்றப்படும். இந்தாண்டு, வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஒன்றரை அடி உயரம் உள்ள செம்பு தீப கொப்பரைக்கு, பேரூர் ஆதின மடத்தில் வைத்து, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் சிறப்பு பூஜை செய்து, அணையா தீபத்தை நேற்றுமுன்தினம் ஏற்றினார். தொடர்ந்து, அணையா தீப இயக்க அறக்கட்டளையினர் மற்றும் சிவனடியார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பாதயாத்திரையாக, பேரூரில் இருந்து பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றனர். நேற்று, அடிவாரத்தில் இருந்து, மஹா தீபம் ஏற்றப்பட உள்ள தீப கொப்பரை மற்றும் அணையா தீபத்துடன், வெள்ளியங்கிரி மலை ஏறினர். இன்று காலை, ஏழாவது மலை உச்சிக்கு சென்றடைவர். கார்த்திகை தீபத்திருநாளான இன்று, சரியாக மாலை, 4:00 மணிக்கு, வெள்ளிங்கிரிமலையில் ஏழாவது மலையின் உச்சியில், ஒன்றரை அடி உயரம் கொண்ட செம்பு தீப கொப்பரையில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.